புதுடில்லி: 'நான் தவறு செய்திருந்தால், என்னை துாக்கிலிட்டு, என் கண்களில் அமிலத்தை ஊற்றுங்கள்' என, 'மாஜி' பா.ஜ., - எம்.எல்.ஏ.,வும், பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவருமான குல்தீப் சிங் சென்கார், நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த, பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., குல்தீப் சிங் சென்கார். சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில், இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 'சென்காரின் உயிர், இயற்கையாக பிரியும் வரை, அவர் தனது வாழ் நாளை சிறையில் கழிக்க வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், அந்த சிறுமியின் தந்தை படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சென்கார் உட்பட ஏழு பேரை, குற்றவாளிகள் என அறிவித்து, டில்லி நீதிமன்றம், சமீபத்தில் தீர்ப்பளித்தது. இவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், குல்தீப் சென்கார் உட்பட குற்றவாளிகள் அனைவரும், டில்லி நீதிமன்றத்தில், நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, குல்தீப் சென்கார், நீதிபதியிடம் கூறியதாவது: சிறுமியின் தந்தை, போலீஸ் காவலில் உயிரிழந்தார். அதற்கும், எனக்கும் தொடர்பில்லை. எனக்கு நீதி வழங்குங்கள். நான் தவறு செய்திருந்தால், என்னை துாக்கிலிட்டு, என் கண்களில், அமிலத்தை ஊற்றுங்கள். இவ்வாறு, அவர் கூறினார்.